பாராளுமன்ற தேர்தல் : அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

பாராளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் அமைச்சரவைக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேரை தொகுதிவாரி முறையில் குறித்த தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் ஊடாக நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கும் எஞ்சிய 65 பேரை விகிதாசார முறையில் தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் தேர்ந்தெடுக்கவும் பெரும்பான்மையானோர் அந்த குழுவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு இதனை சட்டமூலமாக்குவதற்காக சட்டவரைஞர்களுக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
216 Views
Comments