24 மணித்தியாலங்களில் 4 இடங்களில் தூப்பாக்கிச்சூடு: 6 பேர் கொலை, 6 பேர் காயம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
12

24 மணித்தியாலங்களில் 4 இடங்களில் தூப்பாக்கிச்சூடு: 6 பேர் கொலை, 6 பேர் காயம்

24 மணித்தியாலங்களில் 4 இடங்களில் தூப்பாக்கிச்சூடு: 6 பேர் கொலை, 6 பேர் காயம்

இன்று (12) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நான்கு இடங்களில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவங்களில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

 

பிட்டிகல, அம்பலாங்கொடை  பகுதிகளில்  இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நேற்றிரவு பதிவானதுடன், இதில் நால்வர் உயிரிழந்தனர்.

 

துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்ற இடங்கள் சுமார் 30 கிலோமீட்டர் இடைவௌியில் உள்ளன.

 

பிட்டிகல - குருவல பகுதியில் நேற்றிரவு முதலாவது துப்பாக்கிப் பிரயோக சம்பவம் பதிவானது. நேற்றிரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பன்படுத்தி சிறு வர்த்தக நிலையமொன்றுக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயடைந்தனர்.

 

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.

 

வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

 

சூதாட்ட நிலையமொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சமத்தப்பட்டிருந்தது.

 

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தப்பியோடியுள்ளார்.

 

பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்திருந்த இருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

 

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 31 வயதான சச்சின் மதுரங்க தனது மனைவியுடன் வர்த்தக நியைத்திற்கு வந்திருந்தார்.

 

அவரது மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த மற்றையவர் ஹொரங்கொல்ல பகுதியை சேர்ந்த 27 வயதான கவீஷ அங்ஜன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

பிட்டிகலவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்று ஒரு மணித்தியாலம் கடப்பதற்கு முன்னர் அம்பலாங்கொடை - கலபொட பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் மற்றுமொரு துப்பாக்கிப் பிரயோக சம்பவம் பதிவானது.

 

இரவு 8.40 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 22,  26 வயதான இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான உதேஷ் மதுரங்க , அயல் வீட்டில் வசித்துவந்த சித்தும் சஞ்சன ஆகியோரே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

 

இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்து, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் மூவரும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்களாவர்.

 

இந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டினையும் ஒரே குழுவினர் நேற்றிரவு நடத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரையொன்றுக்குள் தேரர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

 

அத்தனகல்ல - யட்டவக்க பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக கொண்டு செல்லப்பட்டிருந்தபோது சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயேகம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

 

மல்வத்துஹிரிபிட்டிய கஹடான ஶ்ரீ கனாராம விகாரையில் வசித்துவந்த தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் குறித்த சந்தேகநபர் தனமல்வில - ஹம்பேகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

27 வயதான சந்தேகநபர், அரலகங்வில பகுதியை சேர்ந்தவராவார்.
 

views

224 Views

Comments

arrow-up