தடைக்காலம் நிறைவு: மீன்பிடிக்கு தயாராகும் தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
1983 இன் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் இந்த தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் எப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையான 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
இன்று நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கு தயாராகி வருகின்றனர்.
இந்திய எல்லை தாண்டி மீன்பிடிக்கக்கூடாது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள தமிழக மீன்வளத்துறை, உயிர் காப்பு உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
204 Views
Comments