நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
08

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலைத்தீவுகள் ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முய்சு, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அஹமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிஷீயஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே (Tshering Tobgay) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் தலைவர்கள் அன்றைய தினம் மாலை இராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இவர்கள் வருகை தருகின்றமை, இந்தியாவின் 'அயலுறவுக்கு முதலிடம்' கொள்கை மற்றும் 'சாகர் கோட்பாடு' ஆகியவற்றுக்கு இந்தியாவால் வழங்கப்படும் உயர் முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

views

207 Views

Comments

arrow-up