உலகின் இருப்புக்கு பெரும் பங்களிப்புச் செய்யும் சமுத்திரம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
08

உலகின் இருப்புக்கு பெரும் பங்களிப்புச் செய்யும் சமுத்திரம்

உலகின் இருப்புக்கு பெரும் பங்களிப்புச் செய்யும் சமுத்திரம்

சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும்.

 

'கடல் எமது உயிர்  - அதை காப்பது எமது கடமை' என்பதே இம்முறை சமுத்திர தின தொனிப்பொருளாகும். 

 

உலகில் உள்ள சமுத்திரங்கள் தொடர்பில்  அதிகக் கவனம் செலுத்தும் நோக்குடன்,  1992 ஆம் ஆண்டு  சமுத்திர தினம் தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டது.

 

1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில்  கனடாவின்  நிறுவனம் ஒன்று  முதன்முதலாக  சர்வதேச சமுத்திர தினம் தொடர்பான  யோசனையை முன்வைத்தனர்.

 

அதனை தொடர்ந்து,  ஐக்கிய நாடுகள் சபை  2008 ஆம் ஆண்டு  அதிகாரபூர்வமாக ஜூன்  08 ஆம் திகதி சர்வதேச சமுத்திர தினமாக அறிவிக்கப்பட்டது.

 

புவியின்  29% மாத்திரமே நிலப்பரப்பாக அமைந்துள்ளது. எஞ்சிய 71% நீரால் மூழ்கியுள்ளது. 

 

புவியில் இந்தளவு நீர் இருந்தாலும் அதில் 0.3 வீதத்தையே  மக்கள் பருகக்கூடியதாக உள்ளது. 97% நீர் உவர் நீராக காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும்.

 

புவியில் வாழும் உயிரினங்களில் 95 வீதமானவை சமுத்திரத்தில் வாழ்கின்றன சமுத்திரத்தின் இருப்பு உலகின் இருப்புக்கு பெரும் பங்களிப்பு செய்கிறது.

 

எமக்கு தேவையான ஒக்சிஜனில் 50 தொடக்கம் 85%  சமுத்திரத்தில் இருந்து கிடைப்பதுடன், 30 வீதமான காபனீரொக்சைடையும் அது உறிஞ்சுகிறது.

 

உலகின் மிகப்பெரிய உணவுக் களஞ்சியமாகவும் எரிபொருள் களஞ்சியமாகவும் சமுத்திரம் அமைந்துள்ளதென்றால், அது மிகையாகாது.

 

மக்களின் இருப்புக்கு அளவற்ற பங்களிப்பை செய்யும் சமுத்திரம் இன்று எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்களோ ஏராளம்.

 

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள்  கடலில் கொட்டப்படுவது அதில் முக்கியம் பெறுகிறது.

 

இம்முறை  சமுத்திர தினத்தில், முன்னரை விட எமது கடல்  தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியத்துவம் காணப்படுகின்றது.

 

X-Press Pearl கப்பலில் பரவிய தீயினால் கப்பலில் காணப்பட்ட பாரியளவிலான பிளாஸ்டிக் மணிகள் எமது கடலில் வீழ்ந்தன. 

 

3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தினால் 1680 தொன் பிளாஸ்டிக் கடலில் ஒதுங்கியிருந்தது.

 

இந்த பிளாஸ்டிக் சிதைவதற்கு குறைந்தது 500 முதல் 1000 ஆண்டுகள் செல்லும் என்பது  மிக முக்கியமான விடயமாகும்.

 

X-Press Pearl  கப்பலில் ஆபத்தான திரவங்கள் கொண்ட 81 கொள்கலன்கள் காணப்பட்டன. இவற்றில் 25 தொன் நைட்ரிக் அமிலம் உள்ளடங்கியுள்ளது.

 

இந்த அனர்தத்தினால்  விலைமதிப்பற்ற நட்டம் ஏற்பட்டிருந்தது.

 

கடல் ஆமைகள், திமிங்கலங்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழந்தன. பிளாஸ்டிக் கரை ஒதுங்கியிருந்தது.

 

இந்த அனர்த்தத்தினால் சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதுடன், அதன் தாக்கம்  தொடர்கின்ற நிலையில், எவரும் பொறுப்புக்கூறாத நிலையே காணப்படுகின்றது.

 

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடலுக்கும் சுற்றாடலுக்கும் பெரும் அழிவினை ஏற்படுத்திய X-Press Pearl கப்பல் விபத்து தொடர்பில் உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

புத்தளம் மற்றும் வத்தளையில் உள்ள களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துகள்களை மேலும் ஆய்வு செய்வதற்காக பிரித்தானிய நிபுணர் பேராசிரியர் ரிச்சர்ட் தோம்சன் நேற்று (07) இலங்கை வந்தடைந்தார்.

 

அவருக்கு உதவியாக அவுஸ்திரேலிய சட்டத்தரணியான  மிச்சல் டிரெய்லரும் நாட்டிற்கு  வருகை தந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், ரிச்சர்ட்  தோம்சன் இதற்கு முன்னரும் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால்  நாட்டின் கரையோரங்களில்  ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரிக்கவுள்ளார்.

 

குறித்த அறிக்கையானது, சிங்கப்பூர் சர்வதேச வணிக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நட்ட ஈட்டு வழக்கிலும், லண்டன் அட்மிரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலும் முன்வைக்கப்படவுள்ளது. 

 

65,610 கிலோமீட்டர் சதுர பரப்பளவைக் கொண்ட தீவே இலங்கைத் தீவு. எமது கடல் பரப்பானது  8 மடங்கு அதிகமாகும்.

 

இலங்கையைச் சுற்றியுள்ள 517,000 சதுர கிலோ மீட்டர் கடல் வலயம் பொருளாதார வலயமாகும்.

 

இது விலை மதிப்பற்ற பாரிய வளமாகும். தென் அண்டார்ட்டிக்கா வரை நிலமற்ற பாரிய கடலாகும்.

 

இது சீனா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் எண்ணெய் வளங்கள் அமைந்துள்ள மத்திய கிழக்கின்  பெரிய சந்தைகளை இணைக்கும் கப்பல் பாதையில் ஒரு தனித்துவமான இடமாகும்.

views

223 Views

Comments

arrow-up