சம்பூரில் கஞ்சி பரிமாறிய நால்வர் கைது: நினைவுகூர்தல் உரிமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு

திருகோணமலை - சம்பூரில் கஞ்சி பரிமாறிய நால்வர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
சம்பூர் கைது தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் L.T.B.தெஹிதெனியவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நினைவுகூர்தல் உரிமையை உறுதி செய்யுமாறு கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ள பின்னணியிலேயே பொலிசார் இவ்வாறான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று அமைதியாக இடம்பெறும் நினைவேந்தல்களை தடுத்து வருவதாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சர்வதேச சிவில், குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளார்களா என விசாரிப்பதாகக் கூறி விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நினைவுகூர்தல் என்பது அனைவருக்கும் உரித்தான உரிமை என்பதுடன், தெற்கிலும் பல்வேறு நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் நினைவேந்தல்களுக்கு பொலிஸார் இவ்வாறாக தடை ஏற்படுத்துவதானது நினைவுகூர்தல் உரிமையை தடுப்பதுடன் , அரசின் நல்லிணக்கம் தொடர்பிலான தூர நோக்கு எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பூர் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்வதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுகூர்தல் உரிமையை உறுதி செய்யும் நோக்கில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைக்குமாறும் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தனவினால் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை - சேனையூரில் கஞ்சி பரிமாறிய நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
223 Views
Comments