கடற்படையின் விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டு மீனவர்கள் கைது

திருகோணமலை - புடவைக்கட்டு பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியிலும் மன்னார் - சிலாவத்துறை கடற்பிராந்தியத்திலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றும் நேற்று முன்தினமும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம்(26) கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையில் திருகோணமலை புடவைக்கட்டு பகுதியில் படகொன்றுடன் 5 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் சிலாவத்துறை கடற்பிராந்தியத்தில் நேற்று(27) கடற்படையினர் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையில் 5 மீனவர்கள் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்த மாவட்டங்களிலுள்ள கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
212 Views
Comments