புதிய விவசாய வர்த்தகத்துறையை நாட்டில் உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்காக தாம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புதிய சட்டத்தின் மூலம் தொடர்புபட்ட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகள் நீக்கப்படும் என்றும், பெருந்தோட்டத்துறையில் புதிய தொழில்நுட்ப முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துருகிரிய தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கல்வி மற்றும் நிர்வாக கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத்துறைக்குத் தேவையான புதிய திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் தேசிய தோட்ட முகாமைத்துவ நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கூடங்கள், விரிவுரை மண்டபங்கள், கணினி ஆய்வகங்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான தொழில் ஆலோசனை மையங்கள் இங்கு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதுடன், AI மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மையமும் இங்கு நிறுவப்படவுள்ளது.
விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே நாட்டின் கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் ஏனைய தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய ஜனாதிபதி, முதற்கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
206 Views
Comments