கட்சி செயற்பாடுகளில் ஈடுபட தடை ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிடுமாறு கோரி துமிந்த திசாநாயக்க மனு தாக்கல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
15

கட்சி செயற்பாடுகளில் ஈடுபட தடை ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிடுமாறு கோரி துமிந்த திசாநாயக்க மனு தாக்கல்

கட்சி செயற்பாடுகளில் ஈடுபட தடை ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிடுமாறு கோரி துமிந்த திசாநாயக்க மனு தாக்கல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்கவிற்கும்  கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ  கட்சியின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடையேற்படுத்துவதை தவிர்க்குமாறு கடுவலை மாவட்ட நீதிமன்றம் சில தரப்பினருக்கு  நேற்று தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

 

துமிந்த திசாநாயக்கவின் மனு கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருதரப்பு சட்டத்தரணிகளும் தமது வாதங்களை முன்வைத்தனர்.

 

விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இந்த தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சரத் ஏக்கநாயக்க, விஜேதாச ராஜபக்ஸ, கீர்த்தி உடவத்த, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 

கடந்த 12 ஆம் திகதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் என்ற பெயரில்  நடத்தப்பட்ட கூட்டத்தில்,   விஜேதாச ராஜபக்ஸ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்ட போதிலும் அந்த கூட்டம் சட்டபூர்வமானதல்ல என துமிந்த திசாநாயக்கவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு  குடியியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 16 ஆம் சரத்திற்கமைய, தமக்கு உரிமை உள்ளதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  சந்தர்ப்பத்தில், விஜேதாச ராஜபக்ஸ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அடிப்படை ஆட்சேபனைகளை தெரிவித்ததுடன், மனு மீதான பரிசீலனையை தொடர அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

 

எனினும், மனு மீதான விசாரணையை  தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தன ஜயசுந்தர வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு, மனுவை தொடர அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட பிரதம நீதிபதி தெரிவித்தார்.

views

244 Views

Comments

arrow-up