தரமற்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

தரமற்ற Rituximab எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் நாட்டிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை அறிவித்தார்.
வழக்கின் முதலாவது சந்தேகநபரான சுதத் ஜனக பெர்னாண்டோ என்பவர், குறித்த 1200 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துக் குப்பிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகித்துள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மன்றுக்கு அறிவித்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பில் ஏற்கனவே சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாதென மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை என தெரிவதாலும் பிணை வழங்கப்படின், பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் நிலைமை உருவாகக்கூடுமென்பதாலும் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக நீதவான் அறிவித்தார்.
இதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டார்.
235 Views
Comments