2023 இன் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளது - மத்திய வங்கி அறிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
26

2023 இன் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளது - மத்திய வங்கி அறிக்கை

2023 இன் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளது - மத்திய வங்கி அறிக்கை

கடந்த வருடம் நாட்டின் பொருளாதார சுருக்கம் 2.3 வீதமாகக் காணப்படுவதாக 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வரலாற்றில் பதிவான மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், 2023 இன் பிற்பகுதியில் பொருளாதாரம் மீண்டெழ ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2022 ஆம் ஆண்டு, நாட்டில் 7.3 வீதமாக பொருளாதார சுருக்கம் காணப்பட்டதுடன், பொருளாதாரம் மிகவும் நிலையற்றதாகவும் இருந்தது.

 

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில், பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியை காட்டியதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2022 ஆம் ஆண்டில் 69.8 வீதமாகக் காணப்பட்ட அதிகூடிய பணவீக்கமானது, 2023 ஆம் ஆண்டில் 5 வீதமாகக் குறைக்கப்பட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

 

மேலும், 2023 ஆம் ஆண்டு அதிகரித்திருந்த வட்டி வீதங்கள், தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் 2023 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு ஊழியர்கள் ஊடான வருமானம் மற்றும் சுற்றுலா வருமானங்கள் அதிகரிப்பை காட்டியுள்ளதாக மத்திய வங்கி கூறுகிறது.

 

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 1.9 பில்லியன் டொலராக இருந்த நாட்டின் மொத்த கையிருப்பு, ஆண்டின் இறுதியில் 4.4 பில்லியனாக அதிகரித்ததாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 363.11 சதமாக இருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி, கடந்த வருட இறுதியில் 323.92 சதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு 8. 4 வீதமாக இருந்த அரச வருமானம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 11.1 வீதமாக அதிகரித்துள்ளது.

 

2022 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 114.2 வீதமாக இருந்த அரச கடன், 2023 ஆம் ஆண்டு 103.9 வீதமாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட விரிவான கடன் திட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் ஊடாக, பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கி அதன் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இலங்கை மத்திய வங்கி அதன் பொருளாதார அறிக்கையை நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று கையளித்தது.

 

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

views

10 Views

Comments

arrow-up