தாதியர் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
02

தாதியர் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

தாதியர் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டின் 10 வைத்தியசாலைகளில் இன்றும்(02) 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுகாதார ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேற்று(01) இடம்பெறவிருந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்துள்ளார்.

 

அதற்கமைய, இன்று(02) காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நியாயத்தை வழங்குமாறு கோரி, கண்டி தேசிய வைத்தியசாலை, குருணாகல், அனுராதபுரம், இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகள், பதுளை மாகாண வைத்தியசாலை ஆகியவற்றில் நேற்று(01) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

 

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல், அவசர காரணங்களால் இன்று(02) பிற்பகல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை 24 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைத்து, 04 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அவர்கள் தீர்மானித்துள்ளனர். 

 

பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட பணியாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோர் பொருளாதார நீதி கோரிய இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளனர்.

 

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபாலவிடம் வினவிய போது, 
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளனர்.

 

இன்றைய கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்க நேரிடும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

views

234 Views

Comments

arrow-up