முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற முட்டை உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முட்டைகளுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்த சில முட்டை உற்பத்தியாளர்கள் முயற்சிப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில், உள்நாட்டு சந்தையில் முட்டைகள் கிடைப்பதற்கான வழிவகையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.
புத்தாண்டு மாதத்திலும் தட்டுப்பாடின்றி முட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, முட்டைகள் விற்கப்படவேண்டிய அதிகபட்ச சில்லறை விலையொன்றை முன்வைக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமாலி கொத்தலாவலவிற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.
இதற்கமைய, அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக காணப்பட்ட போதிலும், சந்தையில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
247 Views
Comments