முல்லைத்தீவில் கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர் கைது

யுக்திய சுற்றிவளைப்பின் போது, பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது முல்லைத்தீவு - கற்சிலைமடு பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நேற்று (14) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ‘யுக்திய’ சுற்றிவளைப்பின் கீழ் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையை நேற்று முன்னெடுத்தனர்.
இதன்போது, மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறித்தபோது, அது நிற்காமல் பயணித்துள்ளமையினால், குறித்த வாகனம் மீது கற்சிலைமடு பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, டிப்பர் வாகனம் மடக்கிப்பிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த 21 வயதான குறித்த சந்தேகநபர் ஏற்கனவே பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஒருவர் என்பதுடன், அவர் பல சந்தர்ப்பங்களில் தப்பியோடியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
254 Views
Comments