மாஸ்கோ தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு, ISIS பொறுப்பேற்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
23

மாஸ்கோ தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு, ISIS பொறுப்பேற்பு

மாஸ்கோ தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு, ISIS பொறுப்பேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் (Moscow) அரங்கொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. 

 

தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

 

தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நால்வர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு பிரிவினரால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 தலைநகரில் உள்ள Crocus City கட்டடத்தில் அமைந்துள்ள அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்வின் போது ஆயுதம் ஏந்திய குழுவினர் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

இராணுவ உடைக்கு ஒத்த உடையை அணிந்திருந்த துப்பாக்கிதாரிகள், Crocus City கட்டடத்தின் நுழைவாயில் ஊடாக உள்நுழைந்த போது அங்கு பிரபல பிக்னிக் இசைக் குழுவின் இசைக்கச்சேரி இடம்பெறவிருந்தது.

 

பாதுகாப்பு ஊழியரும் அவரது உதவியாளரும் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது, ஆயுதம் தாங்கிய குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அரங்கிற்குள் நுழைந்துள்ளனர். 

 

கீழ் மாடியிலிருந்தவர்கள் மீதும் ஆயுததாரிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

 

சுமார் 7300 ஆசனங்களைக் கொண்ட அரங்கில் நேற்று மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடியிருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்த தாக்குதலினால் வானம் புகை மண்டலமாக காட்சியளித்ததுடன், தாக்குதல்தாரிகளினால் பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இசை அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையைத் தாண்டி வாகன நிறுத்துமிடத்தை நோக்கி ஓட, மற்றவர்கள் கூரை மீதேற முயற்சித்துள்ளனர்.

 

மேலும் சிலர் ஒளிந்து தமது உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.

 

இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பதுடன், அவரது பிரதிநிதி ஒருவர் இந்த தாக்குதல் தொடர்பில் இரங்கல் செய்தியை வௌியிட்டு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கிதாரிகளை கொல்ல வேண்டுமென பாதுகாப்பு பேரவையின் பிரதித் தலைவர் திமித்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த தாக்குதலுடன் உக்ரைன் தொடர்புபட்டிருந்தால், அந்நாட்டின் உயர் அதிகாரிகளைத் தேடி அழிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த தாக்குதலுக்கும் தமது நாட்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளது.

 

தாக்குதலின் பொறுப்பை ISIS அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இந்த தாக்குதலின் பின்னணியில் தாம் உள்ளதாக ISIS அமைப்பினரும் தெரிவித்துள்ளனர்.

 

ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கான தேவை, ISIS அமைப்பிற்கு இருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் ஊடாக தெரியவந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தாக்குதல் தொடர்பில் தாம் எச்சரிக்கை விடுத்ததாகவும் அதனை ரஷ்யா கவனத்திற்கொள்ளவில்லையெனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

 

பாரிய கூட்டங்களில், நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாமென ரஷ்யாவிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அமெரிக்க தூதரகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

மாஸ்கோவிலுள்ள விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பிரதான இடங்களில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் நேற்றிரவு முதல் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

உலக நாடுகளின் அரச தலைவர்கள் பலரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் வௌியிட்டுள்ளனர்.

views

27 Views

Comments

arrow-up