ஜனாதிபதி - பாரத பிரதமர் இடையே சந்திப்பு

இந்தியாவிற்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்தியாவின் ராஷ்ட்ரபதி பவனில் முற்பகல் நடைபெற்றது.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கை - இந்திய தலைவர்களுக்கும் இருநாட்டு இராஜதந்திரிகளும் வணக்கம் செலுத்தியும் கைலாகு கொடுத்தும் வரவேற்றனர்.
அதன்பின்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நண்பகல் இடம்பெற்றது.
இந்த நிலையில், இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி நகரை நேற்று(15) சென்றடைந்த ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தல், இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல், இலங்கையின் விவசாயத்துறை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
95 Views
Comments