இரத்தினபுரியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் பலி; இருவர் காயம்

நாட்டில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான சீரற்ற வானிலையால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி - கஹவத்த, ஓபாவத்தை தோட்டம் மூன்றாம் பிரிவில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் இன்று (28) நண்பகல் வேலை செய்துகொண்டிருந்தபோதே குறித்த மூவரும் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 49 வயதான பெண் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தலவாக்கலை - டயகம, அக்கரப்பத்தனை ஹோல்ப்ரூக் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இதனால், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் ஒரு வான் கதவும் திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - பம்பரகலை பகுதியில் மரமொன்று முறிந்து மின் கம்பத்துடன் வீடொன்றின் மீது வீழ்ந்ததை அடுத்து, குறித்த வீடு தீபற்றியுள்ளது.
குறித்த தீயினால் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இன்று பார்வையிட்டனர்.
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 1293 குடும்பங்களை சேர்ந்த 1485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முந்தல் பிரதேச செயலகப் பிரிவின் 12 குடும்பங்களை சேர்ந்த 44 பேரும், ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகப்பிரிவின் 98 குடும்பங்களை சேர்ந்த 327 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தினால் சுமார் 160 ஏக்கர் சிறுபோக வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
211 Views
Comments