தயாசிறி ஜயசேகர தொடர்பில் தீர்மானிக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு கால அவகாசம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
05

தயாசிறி ஜயசேகர தொடர்பில் தீர்மானிக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு கால அவகாசம்

தயாசிறி ஜயசேகர தொடர்பில் தீர்மானிக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு கால அவகாசம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்து வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்படுமா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியது.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியிலிருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான A.H.M.D.நவாஸ், ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர்  முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

மனுதாரருக்கு எதிரான கடிதத்தை மீளப்பெறுவதா, இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதற்கு தமது சேவை பெறுநருக்கு கால அவசகாசம் தேவைப்படுவதாக மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன, பதில் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

 

இதற்கிணங்க, இரண்டு வார கால அவகாசம் அளித்து, அடுத்த அமர்வில் தமது தீர்மானத்தை தெரிவிக்குமாறு, மனுதாரர்களுக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

 

தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்தும் பொதுச்செயலாளர்  பதவியிலிருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

 

எனினும், தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

அந்த தீர்மானத்தை எதிர்த்து மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தயாசிறி ஜயசேகர மீண்டும் மனுவொன்றை தாக்கல் செய்த போதிலும், அதற்கான தடை உத்தரவை பிறப்பிக்க அந்த நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

 

அதனையடுத்து, குறித்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தயாசிறி ஜயசேகர உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளார். 

 

இந்த மனு ஜூன் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

views

217 Views

Comments

arrow-up