ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் - ஜனாதிபதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்கள் திருப்தியடையும் பட்சத்தில், அவற்றை முன்நோக்கி கொண்டுசெல்ல முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இல்லையாயின், மீண்டும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டில் மருந்து, உரம் ஆகியவற்றின் தட்டுப்பாட்டுடன் எரிபொருள், எரிவாயு வரிசைகளில் நிற்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற துறைசார் கண்காணிப்பு குழுக்களில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லையில் நேற்று(11) நடைபெற்ற கொள்கை மறுசீரமைப்பு கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கும் நபர்களிடம், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் தேர்தலின்போது தனிநபர்களை பார்த்து தீர்மானம் மேற்கொண்ட தவறை மீண்டும் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அது தொடர்பான வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் அதனை நாட்டிற்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
183 Views
Comments