ட்ரம்பின் 100 நாட்கள் : உலக ஒழுங்கை தலைகீழாக மாற்றிய ஜனாதிபதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
30

ட்ரம்பின் 100 நாட்கள் : உலக ஒழுங்கை தலைகீழாக மாற்றிய ஜனாதிபதி

ட்ரம்பின் 100 நாட்கள் : உலக ஒழுங்கை தலைகீழாக மாற்றிய ஜனாதிபதி

அமெரிக்க (United States) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இரண்டாவது முறையாகப் பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்.

 

அவர் பதவியேற்ற தினத்திலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

 

இதன்படி இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீது பரஸ்பர தீர்வை வரி விதிப்பை மேற்கொண்டார். 

 

பின்னர் குறித்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டதுடன், ஏனைய நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தினார். 

 

அத்தோடு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டதுடன், 60,000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

 

மேலும் பலஸ்தீனியர்கள் (Palestine) வெளியேற்றப்படுவார்கள் என்றும், காசா கைப்பற்றப்பட்டு ஒரு ஆடம்பரக் குடியிருப்பாக மாற்றப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விடயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி நீதிமன்றம் சென்றன. இந்த குறுகிய காலத்தில் ட்ரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

வெறும் 100 நாட்களில், ட்ரம்ப் 140 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றில் 36 ஒப்பந்தங்கள் முதல் வாரத்திலேயே கையெழுத்திடப்பட்டன. 

 

அதே நேரத்தில் ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே ஆகும்.

 

உலக சுகாதார அமைப்பு, காலநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்தங்கிய நாடுகளுக்கான UNWRA நிதி நிறுத்தப்பட்டது.

 

நாட்டில் இப்போது இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறி திருநங்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

 

தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதுடன் 100வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன் மாகாணத்தில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

views

4 Views

Comments

arrow-up