மழை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அனர்த்தங்களினால் 11 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
15 மாவட்டங்களில் மழையுடனான வானிலையால் 34,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் 246 பேர், 74 பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்றினால் 1246 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் சில இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டிய முதல் பதுளை வரையிலான ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில இடங்களில் கற்பாறைகள், மண்மேடுகள் சரிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், பதுளை - கொழும்பு இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரண்டு இரவு நேர விசேட ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
243 Views
Comments