சுற்றுலா விசா தொடர்பில் சட்ட மாஅதிபரால் நகர்த்தல் பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பிற்கமைய மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலும் தௌிவுபடுத்திக்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சட்ட மாஅதிபருடன் எதிர்வரும் தினங்களில் விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக வியானி குணதிலக கூறினார்.
இது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவிய போது, ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக விடயங்களை முன்வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலத்திரனியல் விசா சேவையை வழங்குதல் தொடர்பான செயற்பாட்டை இரண்டு வௌிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் செயற்படுத்தப்படுவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
அதற்கமைய கடந்த 2ஆம் திகதி இரவு முதல் அமுலாகும் வகையில் Online முறையில் விசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.
அதற்கமைய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசா வழங்கும் நடவடிக்கை மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.
163 Views
Comments