22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த மேலும் 22 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாவது தடவையாகவும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sea Of Sri Lanka கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்றிரவு(22) கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, மீன்பிடி தடைக்காலத்தின் பின்னர் அத்து மீறி Sea Of Sri Lanka கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 மீனவர்கள் படகுடன் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதால் வருடாந்தம் சுமார் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு மதிப்பிட முடியாதளவு பாதிப்பு ஏற்படுவதாக அந்த அமைப்பு கூறுகின்றது
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 204 இந்திய மீனர்வகள் 27 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
251 Views
Comments